"திருமணமாகாத பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாளின் திருப்பாவை, "வாரணமாயிரம்' என்று தொடங்கும் பத்து பாசுரங்களை பக்தியுடன் படித்தால் நல்ல கணவனும் நற்குணம் கொண்ட குழந்தைகளும் பெறும் பாக்கியம் கிடைக்கும்' என்று சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சொல்கிறாள்.
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியாா் திருமொழி
தனியன்
அல்லிநாள் தாமரைமே லாரணங்கினின் துணைவி
மல்லி நாடாண்டமடமயில் ----- மெல்லியலாள்
ஆயா்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயா் பயந்த விளக்கு.
நாச்சியார் திருமொழி பாசுரங்கள்
Vaaranam aayiram | Nachiyar Thirumozhi paasurangal
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
*****
*கல்யாண நாளில் சீா்பாடல் கட்டத்தில்
நாச்சியாா் ஸம்பாவனை செய்தபின்
11 வது பாசுரத்தை சேவிப்பது வழக்கம்.
வாரணமாயிரம் பாசுரங்கள்
Vaaranam aayiram paaraayanam| Vaaranamaayiram Pugazh
திருமணம் ஆக வேண்டியவர்கள், திருமணம் தாமதப்படுபவர்கள், மேல்கண்ட பாசுரங்களை பரமன் திருமுன் திருவிளக்கேற்றி, நித்தமும் பாட, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் திருவருளால், மனதிற்கிசைந்த வாழ்க்கைத் துணையை அடைந்து சிறப்புற வாழ்வது திண்ணம்.
மேலும், திருமணத்துக்கு முகூர்த்தப் பட்டு எடுக்கும் சமயத்தில், மூன்றாவது பாசுரமான, 'இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்' என்று துவங்கும் பாசுரத்தை பதினோரு முறை பாராயணம் செய்து பின் புடவை, வேட்டி எடுக்க, மணமக்கள் வாழ்வில், பரமன் அருள் மழையெனப் பொழிந்து வாழ்விக்கும்.
வைணவ ஆலயங்களில், எத்தனை வேத மந்திரங்கள் ஒலித்தாலும், இரண்டு திருப்பாவைப் பாசுரங்கள் (சிற்றம் சிறு காலே, வங்ககடல்) பாடாமல் வழிபாடு நிறைவு அடையாது.இதனை சாற்றுமுறைப் பாசுரங்கள் என்பார்கள்.அதைப்போலவே, நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் அருளிச்செய்த ஆறாவது திருமொழியான, “வாரணமாயிரம்” பதிகத்தைப் பாராயணம் செய்யாமல், திருமணச் சடங்குகளை நிறைவேற்றமாட்டார்கள். இல்லங்களில் மட்டுமல்ல, ஆலயங்களில் நடக்கிற திருக்கல்யாண வைபவங்களிலும், இந்தப் பாசுரங்கள் சேவிக்காமல் நிறைவு செய்யமாட்டார்கள்.
“பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் அனுசந்திக்காத திருமணமும்” பயனற்றவை என்பது வைணவ நம்பிக்கை.ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகையில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் கல்யாணம் என்று சொல்வார்கள்.ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமாளிகைகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யை “சீர் பாடல்” என்று சொல்லுவார்கள்.
நாச்சியார் திருமொழி
Nachiyar Thirumozhi Kothai Andal
நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது.
திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது. கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம்.
- இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்
- இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும்
- மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும்
- நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்
- ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக பெருமாள் வந்த நிலை பற்றியும்
- ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்
- ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்
- எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்
- ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்
- பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்
- பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.
உங்கள் கருத்து : comment