திருப்பாவையின் மகிமை

திருப்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன. ஆண்டாள் பாடிய திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களும் இறைவனின் திருவடியை அடைய நமக்கு வழிகாட்டுகின்றன.

மார்கழி மாதச் சிறப்புகளில் திருப்பாவை ஒன்றாகும். திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.

பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது. திருமாலின் அருளையும், அன்பையும் பெற்றுத் தரும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் திருப்பாவையின் முப்பது பாடல்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டாள் பாடிய திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களும் இறைவனின் திருவடியை அடைய நமக்கு வழிகாட்டுகின்றன.

ஆண்டாள் அவதாரம்

எல்லா அவதாரங்களும் முடிந்தபின் வைகுண்ட‌த்தில் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீமன் பரந்தாமன் தான் உபதேசித்த ‘கீதா’ சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லையே என்று எண்ணுகிறார். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறாராம். லட்சுமி மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, ஆண்டாள், ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்.

கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர். கோதை பிறந்த ஊர். கோவிந்தன் வாழுமூர். சோதி மணிமாடந் தோன்றுமூர். நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர். நான்மறைகள் ஓதும் ஊர். கோதையின் தமிழ்ப்பாசுரம் பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும். இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! ‘கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.’

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். இந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன. திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்றும் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும்.

திருப்பாவை பாடல்கள் முழுவதும் பாடல் வரிகளுடன் வீடியோ

கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை. திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள். திருப்பாவையில் தி என்ற எழுத்து. திருமாலை குறிக்கும். திரு என்ற சொல் மகாலக்ஷ்மியை குறிக்கும்.திருப்பா என்ற சொல் திருப்பாற் கடலை குறிக்கும். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மகாலக்ஷ்மியோடு உறையும் திருமாலை பள்ளி எழுப்புவதாக அமைக்கப்பட்ட பாடல்களை கொண்டது திருப்பாவை. பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் இப்பூவுலகில் அறியாமையில் மூழ்கி இறைவனை மறந்து கிடந்த காலத்தில் மக்களை தட்டி எழுப்ப புவியன்னையே கோதையாக அவதாரம் எடுத்து இந்த மண்ணில் பரந்தாமன் எடுத்த அவதாரங்களை மேற்கோள் காட்டியும், இறைவனை எப்படி வணங்கவேண்டும், அவன் அருளை பெற என்னென்ன வழிமுறைகளை அனுசரிக்கவேண்டும் என்றும், அவனை வணங்குவதினால் கிடைக்கும் பேறுகள் என்ன என்பதையும், அனைவரும் பரந்தாமன் புகழ் பாடுவதால் இந்த உலகமும், மக்களும் எப்படி செழித்து வளமோடு இன்பமாக வாழ்வார்கள் என்பதையும் முப்பது பாடல்களாக திருப்பாவை ஆக கோதை தந்தருளினாள்.

வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது. திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment