வேல் விருத்தம் | Vel Virutham Lyrics in Tamil

வேல் விருத்தம்

Vel Virutham Lyrics with explanation in Tamil

அருணகிரிநாதரின் வேல் விருத்தம்

Vel Virutham Lyrics in Tamil

ஸ்ரீ சண்முக கவசம் புத்தகம்

வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்
வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்

வேல் விருத்தம் – 1

மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்
சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு
செந் நெல்களொடு தரளம் இடவே
செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
இடர் அடைய நுகரும் வடிவேல்
தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்
தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்
குயம் ஒடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

வேல் விருத்தம் – 2

வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன கன்னி
நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி
சைவ சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற்றி இருக்கை வேலே

வேல் விருத்தம் – 3

வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழனிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங் கடல் இலங்கை அதனிற்
போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினில்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே

வேல் விருத்தம் – 4

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமும் அருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்
தண்டம் உடனுங் கொடிய பாசம் உடனுங் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுட னுந் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே

வேல் விருத்தம் – 5

ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரிய தவ முனிவருக்கு இந்துவில் தண்ணென்ற
அமைந்த அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை அறுத் தவர்கள் வெம் பகையினை
முடித்து இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித்து எந்த
மூதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்
தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே

வேல் விருத்தம் – 6

பந்தாடலிற் கழங் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொடு ஆடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணிந் இந்திரர்க் அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகினித் தரங்க சடிலருக்கு அரிய
மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க் கடம் பும்செச்சை மாலையும்
குவளையும் செங் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே

வேல் விருத்தம் – 7

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமாயினு மேவினால்
அடைய உருவிப் புறம் போவதல்லது தங்கல்
அறியாது சூரன் உடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியும் அது
செங்கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மங்கையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே

வேல் விருத்தம் – 8

மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து
ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்று உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக கத்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்
சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்

வேல் விருத்தம் – 9

தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்
செயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்
நீடுமைக் கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர
அழல் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே
சாடு மைப்புயல் எனப் பசுநிறச் சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்
சமரமயில் வாகனன் அமரர் தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே

வேல் விருத்தம் – 10

வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
மாலறியு நாலு மறைநூல்
வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோல மகராலய சலங்களும்
உலோகனிலை நீர்நிலை இலா
ஒலாவொலி நிசாசரர் உலோகம் அதெலாம் அழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலா வினொத வாசிலிமுகா விலொச
நா சின சிலாத அணிவிலா
சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே

வேல் விருத்தம் விளக்கம்

வேலனையும் , அவன் கை வேலயும் வேறுபடுத்திப் பாரப்பதற்கில்லை. மயில் வாகனனையும், அவன் மயிலையும் பிரித்துப் பார்ப்பதற்கில்லை. வேல் என்பது ஓர் ஆயுதம். மயில் என்பது ஒரு பட்சி என்று அவன் வேலையும், மயிலையும் எளிதாக எண்ணி விடுவதற்கில்லை. அவன் வேல் என்பது ஞானம். ஞானசக்தியை அதில் தேக்கி வைத்திருக்கிறான் தயாபரன். மயில் என்பது மந்திர ரூபம். தோகை விரிக்கும் பொழுது ப்ரணவத்தின் வடிவம். உயிர்களின் ப்ராண சக்தியை அதில் நிரப்பி இருக்கிறான் சரவணன். அவன் சங்கல்பமாக ஒன்றை நினைத்து விட்டால் வேலும் மயிலும் நொடியில் அதைச் செயல் படுத்தி விடுகின்றன. அவற்றின் வலிமைக்கும், வேகத்துக்கும் முன்னால் எந்த தீய சக்தியும் நிற்க முடிவதில்லை. அதே நேரம் பக்தர்களுக்குப் பரிவுடன் பரிந்து வருவதில், அவன் அபரிமிதக் கருணையின் வெளிப்பாடகவே அவை விளங்குகின்றன. ஆயிரம் ஆயிரம் திருப்புகழ் பாடல்களில் வேலையும், மயிலையும் குறித்து அருணகிரியார் பாடி இருந்தாலும், சிறப்புப் பாயிரமாய் வேல் விருத்தம், மயில் விருத்தம், என்ற பாமாலைகள் சூட்டிப் பரவசமாகிறார். பத்துப் பத்தாய் முத்தாக ஜ்வலிக்கும் பாடல்கள். நாம் சொத்தாகக் காத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்.

வேல் விருத்தம் (1) : மகரம் அளறிடை

முருகன் எறி வேலால் கடல் வற்றிப் போகிறது. மகர மீன்கள் சேற்றில் புரள்கின்றன. கடலடியில் இருந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனின் ஆயிரம் பணா முடிகள் தெரிகின்றன. அவற்றில் பதித்த வைரங்கள் சூரிய, சந்திர ஒளியில் மேலும் மிளிர்கின்றன. மேகங்கள் சுழல மழை பெய்ததால் தேவர்கள் உவப்படைகின்றனர். கடல் வற்றியதால் நதிகளின் ஓட்டம் நின்றது, மலைகள் அஸ்திவாரம் இல்லாமல் அசைந்தன.. மா மரமாக நின்ற சூரன் பிளவு பட்டதால் மீண்டும் பாகீரதி போன்ற நதிகள் பாய அவற்றில் முத்துக்களும் பெருகி வர, நெற் பயிர் செழிக்க, மலைவாழ் பெண்கள் நெல்லோடு சேர்த்து முத்துக்களையும் உரலிலிட்டு குத்துகின்றனர். இவை அனைத்தும் முருகன் கூர் வேலால் சாத்தியமாயிற்று . அவன், மத நீர் பெருகும் கபோலமும் , இரு முறம் போன்ற காதுகளையும், கூரிய வெண் தந்தத்தையும், மற்றும் பகைவரை அழிக்க நெற்றியில் கண் உடைய வினாயக சகோதரன். குயில் போன்ற குரலுடைய தேவசேனை, மயில் போன்ற தோற்றமுடைய குறப்பெண் வள்ளியின் மணாளன் , குமரன், அறுமுகன், அசுரர்களை வென்ற வேல் தாங்கிய வேலவன்.

வேல் விருத்தம் (2) : வெங்காள கண்டர்

இங்கு வேல் என்பது பகைவனை அழிக்கும் ஆயுதமல்ல, அஞ்ஞானத்தை அழிக்கும் ஞான வேல். சூரன் என்றால் அஞ்ஞானம். அதை அழிக்க முருகனின் வேலால் மட்டுமே முடியும். ஆலகாலத்தை உண்ட சிவபெருமானின் சூலாயுதம், திருமாலின் ஒளி படைத்த சக்ராயுதம் மற்றும் தேவர்களின் பதி இந்திரனின் வஜ்ராயுதம் மூன்றுக்குமே அஞ்ஞானத்தை அழிக்கும் சக்தி இல்லை. இதை அறிந்த தேவர்களும் சதுர்முகனும் முருகா, சிறந்த போர் வீரா, நீ ஜெயித்து அருள் என வேண்ட, ஒரு நொடியில் உருவி கிரௌஞ்ச மலை, சூரனுடலை அழித்த தனி ஆண்மை கொண்ட நெடு வேல்.

இது யாருடைய வேல்? கங்காளி சாமுண்டி, வாராகி, இந்திராணி, கௌமாரி, தாமரையில் அமர்ந்த கன்னி, நாரணி, குமரி, திரிபுரை, பைரவி, அமலை, கௌரி, காமாட்சி, கொற்றி (போரில் முன் நிற்பவள்), திரியம்பகியான உமை பெற்ற செல்வ சிறுவனின் வேல். அவன் தான் அறுமுகன், முருகன், அரக்கர்களை அழிப்பவன், அவன் திருக்கை வேல் தான் இது.
பின் குறிப்பு: இங்கு தேவியின் திரு நாமங்கள் தரப்பட்டு இருக்கின்றன. அவளுடைய பீஜாட்ச்சரமான ஹ்ரீமுடன், ஓம் நமச்சிவாய சேர்ந்து ஓம் ஹ்ரீம் நமச்சிவாய என ஒலிக்கிறது. எனவே இந்த வேல் விருத்தத்தை பாராயணம் செய்தால் சக்தி சிவன் இருவரையும் வணங்கிய பலன் கிட்டும்.

வேல் விருத்தம் (3) : வேதாள பூதமொடு

முருகனின் கூரிய வேல் அங்கும் இங்கும் அலைந்து திரியும் தானவர்களை கொன்றது. இந்த அண்டத்தை தாங்கி இருப்பது ஆமைகளின் தலைவனான கூர்ம ராஜனும், ஆயிரம் பணாக்கள் கொண்ட ஆதிசேஷனும் பரந்து விரிந்த மலைகளும் தான். இங்கு அலைந்து திரிந்து துன்பத்தை விளைவிக்கும் தானவர்களை இந்த வேல் கொன்று குவித்தது. அவர்களின் நிணம் தசைகளை முருகனின் படையில் உள்ள வேதாள பூத கணங்களுக்கு அளித்தது. முன் வினையால் சிலர் பூதகணங்களாகி, ஆனால் முருகனை தொழுதால் அவன் படையில் இடம் பெற்றனர் . நாக சர்ப்பத்துக்கு காளி காளித்ரி எமன் எமதூதி என நான்கு விஷப்பற்கள் உண்டு. அவற்றிற்கும் உணவு கிடைத்தது. பசியால் சினந்த பிசாசு கணங்கள் வெங்கழுகுகள், பருந்துகள் அனைவருக்கும் இந்த வேலால் உணவு கிடைத்தது. அதனால் உலகம் காப்பாற்றப்பட்டது.

இது யாருடைய வேல்?

மலர்ச்சுனைகள், மகரந்தம் நிறைந்த, பூஞ்சோலைகள் நிறைந்த, பழனி மலை, சோலைமலை, ஒப்பற்ற திருப்பரங்குன்றம், திருவேரகம், திருச்செந்தூர், திருவிடைக்கழி, திருஆவினன்குடி, கடலால் சூழப்பட்ட இலங்கையில் உள்ள மலர்கள் நிறைந்த கதிர்காமம் போன்ற தலங்களில் உள்ள முருகனை பாடும் , அடியார்களின் புந்தியில் வீற்றிருக்கும் செல்வன் கந்தன் முருகன் குகன் புனித மூர்த்தியின் கை வேல்.

வேல் விருத்தம் (4) : அண்டர் உலகும் சுழல

முருகன் வேல் மிக சக்தி வாய்ந்தது. வஜ்ராயுதம் போன்றது . அது ஒரு சுழல் சுழன்றால் அண்டர் (தேவர்) உலகம் சுழலும். எண் திசைகளும் சுழலும். எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கும். அக்னி தேவனும் சுழல்வான். அலைகடல் கொந்தளிக்கும். அசுரர்கள் உயிர் போகும் தருணம் வந்து விட்டது என பயந்து சுழல்வார்கள். பிரபஞ்சம் எல்லாம் சுழலும். அதே சமயம் வேல் சத கோடி சூரியர்கள் போல் பிரகாசிக்கும். அதில் சூட்டப்பட்டிருக்கும் மணியின் ஓசையால் சகல உலகங்களும் மருளும். போரின் போது இந்த வேல் பல விதமாக சுழலும்.

இது யாருடைய வேல்?

தண்டம் ஏந்தி, பாசக்கயிற்றுடன், கரிய உருவத்துடன், சந்திர பிறை போன்ற கோர பற்களை உடைய, நெருப்பை உமிழும் கண்களுடன் எருமை கடா மீது வரும் எமனை கண்டு நான் நடுங்கும் போது, அஞ்சேல் அஞ்சேல் என தன் மென் தாமரை பாதங்களை எனக்கு அருளும் கருணை வேள், கந்தன், முருகன், குகன், குறவர் மகள் வள்ளியின் மணாளனின் அடல் கொண்ட வேல் அது.

வேல் விருத்தம் (5) : ஆலமாய் அவுணருக்கு

முருகனின் வேல் அசுரனை அழிக்கும், அன்பர்களை காக்கும். எனவே, அது அவுணருக்கு ஆலகால விஷம், அவனை துதிக்கும் தேவர்களுக்கு அமுதம் போல் புத்துயிர் தரும். ஆதவனின் வெப்பத்தை விட தங்கள் தவ வலிமையின் வெப்பத்தால் ஜொலிக்கும் அரிய தவ முனிவர்களுக்கு தண் என்று சந்திரனாய் குளிர்ச்சியை தரும் . அடியார்களின் முற்றுப் பெறாத வினைகளை அறுத்து, அவர்களின் அக புற பகைகளை நீக்கி அவர்களுக்கு இந்திரனுக்கே எட்டாத , அழிவில்லாத பேரின்ப பதவியை தரும். இந்த வேலை அண்ட சராசரங்கள் போற்றுகின்றன.

இது யாருடைய வேல்?

பெரிய யானைகளின் தந்தங்களிலிருந்து சொரியும் முத்துக்களும் , இனிய மூங்கில் கம்புகள் உமிழும் முத்துக்களும், இனிய வாசம் மிகுந்த கஸ்தூரி, அகில், சந்தனம், இலவங்கம் மற்றும் தேன் போன்றவைகளையும், பனை மா போன்ற மரங்களையும் தன் சொத்தாக கொண்ட வேடர் குலப் பெண் வள்ளியை மகிழ்ச்சியுடன் மணந்த மணாளன், போர் களத்தில் தனி நடனம் புரியும் முருகன், அறுமுகன், குகன், சரவணன், குமரனின் வேல். முருகனுக்கு அரோகரா!

வேல் விருத்தம் (6) : பந்தாடலில் கழல்

சிறுமிகள் ஆடும் பல விதமான பந்தாட்டங்களின் போதும், கழக்கோடி ஆட்டம், மற்றும் ஊஞ்சல் ஆடும் போதும் முருகனின் பெருமை பற்றி பாடிக் கொண்டே ஆடுவர். அதில் அசுரர்களிள் வாட்களை முறித்து அவர்களின் வீரத்தை அடக்குவதை பாடுவார்கள். இந்திரனுக்கு மறுபடி அரசாட்சி கிடைத்ததற்காக முருகனை சிலாகித்து, புதிய நறுமணமிக்க மாலைகளை கூந்தலில் சூடிய அரம்பையர், இந்திராணி மற்றும் அவனை பெற்ற அன்னைகள் கௌரி, கங்கை மற்றும் கார்த்திகை பெண்டிரும் அன்போடு அவன் பிரதாபங்களை, அவன் தலைமை மாட்சிமையை புகழ்ந்து பாடுவார்கள். அவனின் இந்த கீர்த்திகள் அனைத்தையும் தன்னகத்தே பெற்ற வேல்.

அது யாருடையது?

அலை வீசும் மந்தாகினியை தலையில் தரித்திருக்கும் சிவபெருமானுக்கு அரிய மந்திர உபதேசம் செய்தவனும், சிறந்த ஆசானும், சிவந்த கொண்டையை உடைய சேவலை தன் கொடியில் உயர்த்திப் பிடித்தவனும், கொத்தான கடம்ப மலர் , இருவாச்சி, நீலோத்பலம், காந்தள் பூ, நீல சங்கு புஷ்பம் அனைத்தையும் தொடுத்து அணிந்த மார்பினனுமான முருகப் பெருமானின் திருக்கை வேல்.

வேல் விருத்தம் (7) : அண்டங்கள் ஒரு கோடி

வேல் ஞானம் மட்டுமல்ல அசுர சக்தியும் கொண்டது. பல கோடி அண்டங்கள், பெரிய பெரிய மலைகள் எதிர்த்து வந்தாலும் அந்த வேல் அவற்றில் ஊடுருவி , பின் பக்கமாக வந்து விடும். எடுத்த காரியத்தை தங்கு தடை இல்லாமல் முடிக்கும். சூரனை கண்ட துண்டமாக வெட்டி காலனும் அச்சத்தில் கலங்கும்படி போர் களத்தில் கொடிய கொலைகளை செய்யும் வேல். பொன் நிறமான மேரு மலையை கடைந்தது போல் கூரிய, கோபம் கொண்ட, பரிசுத்தமான வேல்.

இது யாருடையது? கௌமேதகி என்ற தண்டம், சார்ங்கம் என்ற வில், சுதர்சன சக்கரம், பாஞ்சசன்யம் என்ற சங்கு, நாந்தகம் என்ற வாள் இவற்றை கொண்டவரும், அசுரர்களுக்கு எமனும், மாயாவியும், நெருப்பை உமிழும் கண்கள், வளைந்த கோடுகள், பருத்த உடல், ஆயிரம் பணாக்கள் கொண்ட ஆதிசேஷன் என்ற பொன்னிற படுக்கையில், வண்டு மொய்க்கும் செந்தாமரையில் வாசம் செய்யும் ஸ்ரீ தேவியும், கடலை ஆடையாகக் கொண்ட பூதேவியும் பாதம் வருட, தாமரை போன்ற கண்களை மூடி துயில் கொள்ளும் முகுந்தனின் மருகன், குகன் வாகை திருக்கை வேலே. முருகனுக்கு அரோகரா.

வேல் விருத்தம் (8) : மா முதல்

முருகனின் வேல் ஒப்பற்றது, உலகில் யாருமே பெறாத கீர்த்தியை பெற்றது. அந்த வேல் மாமரமாக மாறிய சூரனை அழித்த வேல். குளிர்ந்த ஏழு மலையையும் ஊடுருவிச் சென்று அதில் வசித்த தானவர்களின் மார்பை பிறந்த வேல். தாமரையில் வாசம் செய்யும் பிரமன் பிரணவப் பொருள் அறியாததால் அவரை சிறையிலிட்ட வேல். நூறு அசுவமேத யாகங்களை செய்த இந்திரனை சூரன் சிறையிலிருந்து மீட்ட வேல். பல யாகங்களை செய்யும் முனிவர்களின் ஆசி பெற்ற வேல். வானிலிருந்து தேவர்கள் மலர் தூவி துதிக்கப்பட்ட வேல். நாவன்மை பெற்ற நக்கீரரால் திருமுருகாற்றுப்படையில் துதிபாடப்பட்ட வேல்.

இது யாருடையது?

கிண்ணம் போன்ற சந்திரனை அலங்காரமாக ஜடையில் சூடியவரும், காலனுக்கே காலனானவரும், உலகை காக்க வில் வாள் வஜ்ராயுதம் சூலம் இவற்றை ஏந்தியவரும், குதிரை உருவில் சிங்கம் போல் கம்பீரமாக சமுத்திரத்தை காக்கும் வடமுகாக்னியை அபிஷேக் நீராக கொண்டவரும், வெண் சங்கை ஆபரணமாகத் தரித்தவரும், எட்டு திக்குகளை ஆடையாக அணிந்தவரும், திரியம்பகர், மகா தேவரின் மகன். கஜானனருக்கு இளையவன். அவன் திருக்கை வேல் தான் இது. முருகனுக்கு அரோகரா.

வேல் விருத்தம் (9) : தேடுவதற்கு அரிதான

முருகனின் வேலின் சக்தி சொல்லி மாளாது. மிகவும் அபூர்வமான, தேடினாலும் கிடைக்காத பவளம் மாணிக்கம் போன்ற நவரத்தினங்களை தன்னில் அடக்கி வைத்திருப்பது போல் பிரகாசிக்கும் சூரியனை இந்த வேல் மூடுகிறது. மழை மேகங்கள் "நாங்களும் சூரியனை மூடுகிறோம், ஒரு சந்தர்ப்பம் தா" என வேலிடம், அதன் திருவடியை பிடித்துக் கொண்டு கெஞ்சுகின்றன. ஏழு கடல்களை இந்த வேல் வற்றச் செய்கிறது. அவை தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. நெடிய சிகரங்களை உடைய மலைகள் "எங்களை பொடியாக்காதே" என சரணடைகின்றன. அப்படிப்பட்ட வலிமையான பரிசுத்தமான வேல்.

இது யாருடையது?

படமெடுத்து ஆடும் ஒளிவீசும் உச்சி மயிர் கொண்டதும், கடை வாயில் உள்ள பற்களால் கொலை செய்ய வல்லதும், நெருப்பை உமிழும் கண்களை உடையதுமான சர்ப்ப அரசன் ஆதிசேஷனை பிடித்து, தனியே எடுத்து, பசும் மலை உச்சியில் வைத்து, தாவி மிதித்து, திம் திம் என நடனமாடும் சமரில் வல்லவனான மயில் வாகனன், அமரர் தொழும் தெய்வம், சண்முகனின் கை வேல். முருகனுக்கு அரோகரா.

வேல் விருத்தம் (10) : வலாரி

முருகனின் வேல் நல்லவர்களை காக்க, தீயவர்களை அழிக்கும் கொலை வேல். வலாரி என்ற அசுரனை அழித்து இந்திரனின் துயரம், ஆகுலம் துடைத்த வேல். கரிய திருமால், நான்கு வேதங்களையும் ஓதும் பிரமன், பிறப்பு இறப்பு அற்ற மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆகியோரின் மனோலயத்தை நிறைவேற்றும் வேல். அலைகள் புரண்டு வரும், மகர மீன்களின் இருப்பிடமான கடலில் உள்ள அனைத்து உயிர்களும் அழிந்து போகும் படி ஓலமிட்டு போரிட்ட அசுரர்கள், அவர்கள் உலகங்கள் அனைத்தையும் எரித்து அழித்த , உலாவி வரும் கொலை வேல்.

அது யாருடையது?

கந்தமாதன் கிரியில் அமர்ந்திருக்கும் சகலகலா வல்லவன், வண்டு ரூபம் எடுத்த கருணை கண்ணன், திருத்தணியில் சினம் தணிந்து வில்லேந்திய வேலனின் வேல். மலர்கள் சந்திரனின் மேல் மோதி அவனிடமிருந்த சேல் மீன்கள் போன்ற கலைகள் அழிய வீரம் காட்டிய வேல். வள்ளி மலையில் சர பட்சி போல் கருமையான திருமாலும், மங்களகரமான கலை மான் உருவ மஹாலட்சுமிமியும் கூடியதால் தோன்றிய வள்ளி என்ற மானை தழுவிய, அகன்ற புஜங்களை கொண்ட கந்தனின் வேல். தன் தும்பிக்கையால் நீரை பாய்ச்சி சமுத்திரம் மற்றும் ஆகாயத்தின் வெப்பத்தை தணித்த யானை முக கணபதியின் இளையோனான முருகனின் கைவேல். (அருணகிரியார் இந்த கடைசி வரிகளின் மூலம் மும்முதற் கடவுளான வினாயகரை வணங்குகிறார்.) முருகனுக்கு அரோகரா.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us