திருவெம்பாவை
திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.
எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய சிவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும்.