உளவு பார்ப்பதற்கு பதில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று விடுவேன்: சீனாவிற்கு எலன் மஸ்க் பதிலடி
டெஸ்லா இன்க் (Tesla Inc.) தலைமை நிர்வாகி எலன் மஸ்க் (Elon Musk) சனிக்கிழமையன்று, தனது நிறுவன கார்களை உளவு பார்க்க யாராவது பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என்றும், ”உளவு பார்த்து தொழில் செய்வதை விட, நான் என் நிறுவனத்தை மூடி விடுவதை மேலாகக் கருதுவேன்” என்று எலன் மஸ்க் கூறினார்.
சீனாவின் இராணுவம் டெஸ்லா கார்களை தடை செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி தெரிவித்தார். மாநில கவுன்சிலின் கீழ் அறக்கட்டளையால் நடத்தப்படும் சீனா மேம்பாட்டு மன்றத்தில் நடந்த ஒரு உயரிய வர்த்தக கூட்டத்தில் அளித்த உரையில் எலன் மஸ்க் (Elon Musk) இவ்வாறு கூறினார்.
சீனா, உலகின் மிகப்பெரிய கார் சந்தையும், மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) முக்கிய சந்தையுமாகும். சீனாவில் டெஸ்லா கடந்த ஆண்டு 147,445 வாகனங்களை விற்பனை செய்தது. இருப்பினும், இந்த ஆண்டு சீன நிறுவனங்களான நியோ இன்க், ஜீலி போன்றவற்றிலிருந்து அதிக போட்டியை டெஸ்லா எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வாகனங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் குறித்த பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி, சீன இராணுவம் டெஸ்லா கார்களை அதன் வளாகங்களுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கம், இராணுவம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் டெஸ்லா வாகனத்தைப் பயன்படுத்துவதையும் அவர்கள் வசிப்பிடத்தினுள் நுழையும் டெஸ்லா கார்களையும் தடை செய்துள்ளது. உயர்மட்ட சீன (China) மற்றும் அமெரிக்க தூதாண்மை அதிகாரிகள் அலாஸ்காவில் நடத்திய ஒரு சர்ச்சைக்குரிய சந்திப்பின் போது, இந்த கட்டுப்பாடுகள் வெளிவந்தன.